அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அவற்றை பாதுகாப்பதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டுமென இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் சி.என். ராஜா தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் 74-வது தமிழ் மாநில மாநாடு ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்தது. இரு நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று, ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இக்கட்டுரைகள் தொடர்பான விவாதங்களும் நடந்தன. இதன் தொடர்ச்சியாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். செயற்குழுத் தீர்மானங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அதற்கான பாதுகாப்பினை காவல்துறையினர் வழங்குவதற்குரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.
போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தண்டிக்கப்படும் போலி மருத்துவர்கள் தண்டனைக் காலம் முடிந்தபின்பு, மீண்டும் சிகிச்சை அளிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன. மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள, மருத்துவமனைகள் ஒழுங்கு பாதுகாப்புச் சட்டத்தை அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதேபோல், போலி மருத்துவர்களை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும். நீட் தேர்வுக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால், அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் இலவச மருத்துவ நுழைவுத் தேர்வுப் பயிற்சியை வழங்கி வருகிறது என்றார்.