திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட சில ஆவணங்களை மர்ம நபர்கள் எடுத்து வெளியே வீசிச் சென்றுள்ளனர். மேலும் பீரோவை உடைக்க முயற்சித்துள்ளதால், வேட்புமனுக்களை திருட முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு 2-ம் கட்டமாக டிச.30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஒன்றியத்தில் உள்ள வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் மன்ற அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், பீரோவின் பூட்டை உடைக்க முடியாததால், மேஜையில் இருந்த வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட சில ஆவணங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், காசோலைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வீசிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த உதவி தேர்தல் அலுவலர் சிங் காரவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பீரோவில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, தாக்கல் செய்யப்பட்ட 27 வேட்புமனுக்களும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த குடவாசல் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்த நபர்கள், வேட்புமனுக்களை திருடிச் செல்லும் நோக்கத்தில் வந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.