ப.முரளிதரன்
இணையவழி பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களை அளிப்பதற்காக, தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 21 புகார் மையங்களை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பு நீக்கத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, பணமில்லா பரிவர்த்தனையை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்காக டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் இ-வேலட், யுபிஐ உள்ளிட்டவை மூலம் மின்னணுப் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை, தள்ளுபடி உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதே வேளையில், மற்றொருபுறம் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏராளமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, இணையதள பணப் பரிவர்த்தனையின்போது மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இத்தகைய இணையதள பணப் பரிவர்த்தனை மோசடிகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக, இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பு புகார் மையங்களை அமைக்க உள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, இன்றைக்கு டிஜிட்டல் டிரான்ஸ்சாக்ஷன் எனப்படும் மின்னணுப் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலம் தங்களுக்குத் தேவையான குண்டூசி முதல் விலை உயர்ந்த ஆபரண தங்கங்கள் வரை வாங்குகின்றனர்.
ஒருசில நிறுவனங்கள் மட்டும் இணையதள விற்பனையை நம்பகத்தன்மையோடு நடத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. இதனால், பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இணையப் பரிவர்த்தனை நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும்போது, ஆங்கிலம், இந்தி மொழிகளிலேயே புகார்களைப் பெறுகின்றன.
அத்துடன், அவர்களுக்கான தீர்வும் எளிதாகக் கிடைப்பதில்லை. இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழகம் உள்ளிட்ட 19 நகரங்களில் 21 குறைதீர்க்கும் மையங்களை அமைக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்காக, தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் பொதுமக்களின் புகார் தொடர்பாக விசாரித்து துரிதமாகத் தீர்வு காண்பார்.
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது அல்லது அந்த பணப் பரிமாற்றத்தின்போது பிரச்சினை ஏற்பட்டாலோ, அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகள், தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கான பணத்தை மீண்டும் தங்கள் வங்கிக் கணக்கில் இணையப் பரிவர்த்தனை நிறுவனம் திருப்பிச் செலுத்தாதபோது, பரிவர்த்தனை செய்யும்போது அதை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நிறுத்தும் வசதியை வழங்காதது உள்ளிட்ட புகார்களை இந்த மையத்தில் அளிக்கலாம்.
30 நாட்களில் நடவடிக்கை
மேலும், இணைய பரிவர்த்தனை தொடர்பான புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களிடம் அளிக்க வேண்டும். அந்தப் புகார் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது புகார் நடவடிக்கைமீது திருப்தி ஏற்படாமல் இருந்தாலோ இந்த மையத்தில் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பதற்கு முன்பு, அதற்கான ஆதாரங்களை சேகரித்து வைத்துக் கொண்டு புகார் அளிக்க வேண்டும். விசாரணையின்போது, புகார்தாரர் வழக்கறிஞர் அல்லாத தங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவரைக் கூட அனுப்பித் தீர்வு காணலாம்.
விசாரணையில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படாதபோது, புகார்தாரர் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், புகார் அளித்ததற்கான செலவு என அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை நஷ்டஈடு கோரலாம்.
இணைய பரிவர்த்தனையில் பிரச்சினை ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்து 13 மாதங்களுக்குள் புகார் மையத்தை அணுக வேண்டும். இந்தக் குறைதீர்ப்பு மையத்தில் வழங்கப்படும் தீர்வு திருப்தியாக இல்லாதபட்சத்தில், தீர்வு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளரை (ஆம்புட்ஸ்மேன்) அணுக வேண்டும். அவர் அளிக்கும் தீர்விலும் திருப்தி ஏற்படவில்லை என்றால், இறுதியாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.