தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 கால யாக சாலை பூஜைகளுடன் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 27-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூரை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் (கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை) சோழ நாட்டின் பொற்காலம். இக்காலத்தில்தான் கட்டிடக் கலை, சிற்பம், இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம் என நுண்கலைகளின் பன்முக வளர்ச்சி சிறப்புற்று இருந்தது.
பொற்காலம் கண்ட ராஜராஜ சோழனுக்கு திருமுறை கண்ட சோழன், மும்முடிச் சோழன், அருள்மொழிவர்மன், சிவபாதசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களும் உள்ளன.
இவரால் கட்டப்பட்டதுதான் உலகத்தில் வேறு எங்கும் காண முடியாத கற்கோயி லான தஞ்சாவூர் பெருவுடையார் கோயில். உலகெங்கும் காண்பதற்கு அரிய கவின்மிகு கலைநுட்பங்கள் அனைத்தையும் இந்த கோயிலில் காணலாம். இக்கோயிலில் பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள் இன்றளவும் பொலிவுடன் காணப்படுகின்றன.
தஞ்சையை ஆண்ட சோழ, பாண்டிய, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் காலங்களிலும் இக்கோயில் செப்பனிடப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 3.4.1980 மற்றும் 9.6.1997 ஆகிய தேதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையரின் உத்தரவின்படி 2020 பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைப் படி, தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சி, தென்னகப் பண்பாட்டு மையம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் மற்றும் சத்திரம் நிர்வாகம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவையும் இணைந்து திருமடங்கள் மற்றும் உபயதாரர் பங்களிப்புடன் மரபுநெறி வழுவாமல் முறையாக கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று பணிகள் நிறைவடைய உள்ளன.
புதுப்பொலிவுடன் திகழும் பெரிய கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளுக்கு முன்னதாக பூர்வாங்க பூஜைகள் ஜனவரி 27-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளன. தொடர்ந்து அன்றே முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.