தமிழகம்

'மாமாவுக்கு ஓட்டு போடுங்க..': திருப்புவனத்தில் நண்பரின் உறவினருக்கு வாக்கு கேட்டு கலகலப்பு ஏற்படுத்திய பிரான்ஸ் மாணவி  

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நண்பரின் உறவினருக்காக பிரான்ஸ் நாட்டு மாணவி வாக்கு கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளுக்கு டிச.27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிச.16-ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மேலராங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மருதுபாண்டியர் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார். அப்போது அவருடன் பிரான்ஸ் நாட்டு மாணவி ஜூயி பெல்லரும் வந்தார்.

அப்போது ஜூயி பெல்லர் ‘மாமாவிற்கு ஓட்டு போடுங்க’ என கூறியபடியே வந்ததால் கலகலப்பாக ஏற்பட்டது.

வேட்பாளர் மருதுபாண்டி கூறுகையில், ‘எனது மருமகன் மூலம் ஜூயி பெல்லர் அறிமுகமாகினார். தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள அவர், நான் போட்டியிடுவதை அறிந்து எங்கள் கிராமத்திலேயே தங்கி தேர்தல் பிரச்சாரத்தை கவனித்து வருகிறார்,’ என்று கூறினார்.

ஜூயி பெல்லர் கூறுகையில், ‘நான் பள்ளிப் படிப்பை முடித்து விரைவில் கல்லூரியில் சேர உள்ளேன். தற்போது தமிழகத்திற்கு சுற்றுலா வந்தேன். என்னுடைய நண்பரின் உறவினர் தேர்தலில் நிற்பதால், அதைக் காண வந்தேன். இந்த தேர்தல் பிரச்சாரத்தால் வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் நெருக்கம் ஏற்படுவதை பார்க்கிறேன். தமிழக கலாச்சாரம் சிறப்பாக உள்ளது. இங்குள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது பிடித்ததால், நானும் வைத்து கொண்டேன்,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT