தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு  கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு: மாநில தலைவர் தகவல்

அ.அருள்தாசன்

உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின் மாநில தலைவர் முபாரக் தெரிவித்தார்.

மேலப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட 18 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒரு பொது உத்தரவு மூலம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக்குறுகிய காலத்திலும், நியாயமான எந்த காரணமும் இல்லாமல், மறுசீராய்வு மனுக்கள் மீதான முடிவை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொதுவாக உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுக்களை வழக்குக் குறிப்பேட்டில் பட்டியலிட்டு, மறுசீராய்வு மனுவில் தான் காணும் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதனை களைந்து சரிசெய்ய 90 நாட்கள் அவகாசத்தை மனுதாரர்களுக்கு வழங்குவது வழக்கமாகும்.

ஆனால் இத்தகைய நடைமுறையை கடைபிடிக்காமல் அனைத்து மனுக்களையும் அவசரகதியில் இரண்டே நாட்களில் பட்டியலிட்டு, அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மிகுந்த வியப்பை அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு மனு அனுப்பும் இயக்கத்தை வரும் 16-ம் தேதி வரை மேற்கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை தகர்த்தெறியும் விதமாக, குடியுரிமை என்ற கருத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான மாற்றத்தை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்கும் தமிழக காவல்துறையின் போக்கு ஏற்கத்தக்கதல்ல. அடக்குமுறை போக்கை தமிழக காவல்துறை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி, திருநெல்வேலி மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி, மாவட்ட பொதுச்செயலாளர் பீர் மஸ்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT