திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் இன்றும் மழை நீடிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் மட்டும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 மி.மீ. மழை பெய்திருந்தது.
பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) பாபநாசம்- 17, சேர்வலாறு- 41, கொடுமுடியாறு- 10. ராமநதி- 8, கருப்பாநதி- 3.5, அம்பாசமுத்திரம்- 23, நாங்குநேரி- 13, சேரன்மகாதேவி- 7, தென்காசி- 4.5, செங்கோட்டை- 2.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலையில் 142.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1467 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 909 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108.40 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1124 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, வடகரை, குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று பகலில் மழை கொட்டியது.
குற்றாலத்தில் பிரதான அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டியதால் பிற்பகலில் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.