தமிழகம்

பேரவையில் பிரதான எதிர்க் கட்சி முழுமையாக இடம் பெற வேண்டும்: கருணாநிதி

செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தே.மு.தி.க. உறுப்பினர்களும் முழுமையான அளவில் பங்கேற்கத் தக்க வகையில், அவர்கள் மீதான தண்டனையை உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

வரப் போகிறது, வரப் போகிறது என்று நான்கைந்து மாத காலமாகவே சொல்லப்பட்டு வந்த - தமிழகச் சட்டப் பேரவைக் கூட்டம் கடைசியாக வந்தே விட்டது. நாளை, 24-8-2015 அன்று தமிழகச் சட்டப் பேரவை கூட்டம் தொடங்க விருப்பதாக அறிவிப்புகள் முறையாக வந்துள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் சட்ட மன்ற பிரதான எதிர்க் கட்சியான, தே.மு.தி.க., கடந்த முறை பேரவையில், அதிமுக வுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கூட்டத் தொடர் முழுவதற்கும் "சஸ்பென்ட்" செய்யப்பட்டு விட்டார்கள்.

அவைக் காவலர்களுடன் மோதிய தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேர் ஒரு கூட்டத் தொடர் மட்டுமல்லாது இரண்டாவது கூட்டத் தொடரிலும் பங்கேற்க முடியாது என்று பேரவைத் தலைவர் அப்போது அறிவித்திருக்கிறார். நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்னும் நடைபெறாததால் கூட்டத் தொடர் இன்னும் முடித்து வைக்கப்பட்டு, அறிவிக்கப்படாமல் உள்ளது.

நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அரசின் அனைத்துத் துறைகளுக்குமான மானியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது.

எனவே வரும் பேரவைக் கூட்டத் தொடரில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக உறுப்பினர்களில், எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தைத் தவிர மற்றவர்கள் அவையில் பங்கேற்க முடியாத அளவுக்கு பேரவைத் தலைவரின் ஆணை அமைந்துள்ளது. பிரதான எதிர்க் கட்சி இல்லாமல் பேரவையை நடத்துவது ஜனநாயக மரபுகளை முழுமையாகப் பின்பற்றுவதாகாது என்பதை உணர்ந்து, பெருந்தன்மையான அணுகுமுறையோடு தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர், வரும் கூட்டத் தொடரில் தே.மு.தி.க. உறுப்பினர்களும் முழுமையான அளவில் பங்கேற்கத் தக்க வகையில், அவர்கள் மீதான தண்டனையை உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT