தமிழகம்

தமிழக மழை நிலவரம்; எந்த மாவட்டங்களில் கனமழை?- வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் என்ன, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, தமிழகத்தில் இதுவரை பெய்த மழை அளவு, அதிக, குறைவான மழை பதிவான மாவட்டங்கள் குறித்த விரிவான தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

“தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் .

தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை 43 சதவீதம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரை அதிகபட்சமாக கடலூர் மற்றும் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடைவாசல் மற்றும் மணிமுத்தாரில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

குறைந்தபட்ச மழையாக புதுவையில் 28 செ.மீ., வேலூர் 26 செ.மீ, பெரம்பலூர் 24 செ.மீ., மதுரை 23 செ.மீ., திருவண்ணாமலையில் 21 செ.மீ., சென்னை 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தைப்பொறுத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை ஆக 30 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT