கார்த்திகை தீபத்தையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை திருடிக்கொண்டு ஓடிய இளைஞர், பொதுமக்கள் துரத்தியதால் குட்டையில் குதித்து மாயமானார். அவரை தேடும் பணியில் 2-வது நாளாக நேற்றும் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தம்பதி சிவசங்கரன், லூசா மேரி. கார்த்திகை தீபம் 3-வது நாளையொட்டி, நேற்று முன்தினம் மாலை வீட்டு வாசலில் பித்தளை குத்து விளக்கில் தீபம் ஏற்றி லூசா மேரி வீட்டுக்குள் சென்றுள்ளார். அந்த வழியே சென்ற இளைஞர், குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதை லூசா மேரி பார்த்து சத்தம் போடவே, அருகே வசிப்பவர்கள் உட்பட பொதுமக்கள் துரத்தியுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து தப்ப, அப்பகுதியிலுள்ள நல்லாற்றின் கிளை வாய்க்கால் தடுப்பணையில் இளைஞர் குதித்துள்ளார். அதில், சமீபத்தில் பெய்த மழைநீர் மற்றும் அப்பகுதி குடியிருப்புகளில் சேகரமாகும் கழவுநீர் என சுமார் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரம் அவரை தேடிய பொதுமக்கள், அனுப்பர்பாளையம் போலீஸார் மற்றும் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவஇடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், போலீஸார் இரவு நீண்ட நேரம் தேடியும், இளைஞரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில், 2-ம் நாளாக நேற்று காலை தொடங்கி மாலை வரை தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனுப்பர்பாளை யம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘தேங்கியுள்ள தண்ணீருக் குள் குதித்தவர் வெளியில் வர வில்லை என்பதே விசாரணையில் கிடைத்த தகவலாக உள்ளது. கழிவுநீர் என்பதால் துர்நாற்றம் வீசுகிறது. உள்ளே இறங்க முடியாத நிலையில், மிதவை அமைத்து அதன் மூலமாக தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.