ஓவியக் கலைஞர் ஷிவராம், யதார்த்தமாகவும் நவீன முறை யிலும் ஓவியம் வரையும் பன்முகத் தன்மை கொண்டவர். இவரது ஓவியப் படைப்புகள் ‘வைப்ரண்ட் சீரிஸ்’ என்ற தலைப்பில் கண் காட்சியாக சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள சோல் ஸ்பைஸ் ஆர்ட் கேலரியில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாட்களில் தினமும் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை இக்கண்காட்சியைக் காணலாம்.
ஓவியர் ஷிவராம், இதுவரை 15-க்கும் மேற்பட்ட கண்காட்சி களை நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது நடை பெறவுள்ள ‘வைப்ரண்ட் சீரிஸ்’ கண்காட்சியில் பளீரென துடிப்பான வண்ணங்களில் நேர் கோடுகளுடன் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்த உள்ளார்.
இவரது கலை வடிவங்கள் பெரும்பாலும் இந்தியப் பாரம் பரியம் மற்றும் கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன. குறிப்பாக தமிழர் பண்பாடு சார்ந்த பரதநாட்டியம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவையும் தெய்வ படைப்புகளாக கலைமகள், விநாயகர், சிவன், புத்தர் மற்றும் அய்யனார் ஓவியங்களும் குறிப்பிடத்தக்கவை.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலைய வாயில்களில் நமது கலாச் சாரத்தை விளக்கும் வகையில் இவரது கைவண்ணத்தில் உரு வான ஓவியங்கள் காண்போரைக் கவரும் வகையில் உள்ளன.