கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகவுள்ள 6 பேரின் புகைப்படத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ளது. துப்புக்கொடுத்தால் ஒரு நபருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ஒரு அமைப்பினர் மதம் மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 12 பேரைக் கைது செய்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்
கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ராமலிங்கம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 6 நபர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என தேசியப் புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க புகைப்படத்துடன் என்ஐஏ தகவல் வெளியிட்டுள்ளது. அதில் திருபுவனத்தைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக்(39), முகமது அலி ஜின்னா(34), கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்(37), பாபநாசத்தைச் சேர்ந்த புஹானுத்தீன்(27), திருவிடை மருதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது(27), நஃபில் ஹாசன் (28) ஆகிய 6 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்கள் குறித்த தகவலை கொடுத்தால் ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.