பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்நிலையில், வழக்கை வேறு மாநிலத்திற்கு மார்ற வேண்டும் என பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீண்ட சிறைவாசத்துக்குப் பின்னர் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. தொடர்ந்து நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஆஜராகி வந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். மேலும் தனக்கு அரசியல் பிரமுகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் ஜாமீனில் பேராசிரியை நிர்மலாதேவி வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, இவ்வழக்கில் சாட்சி விசாரணைகள் தொடங்கியது. பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய கல்லூரியின் செயலர் ராமசாமி மற்றும் புகார் அளித்த மாணவிகள் சாட்சியம் அளித்தனர்.
அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் இந்த வழக்கில் ஒன்று முதல் 32 சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும்போது அவர்களை படம் பிடிக்கக் கூடாது என்றும், வழக்கு நடைபெறும் நீதிமன்ற அறையை படம் பிடிக்கக் கூடாது என்றும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வழக்குத் தொடர்பான செய்திகளை வெளியிடலாம் என்று நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், சாட்சி விசாரணையை பூட்டிய அறைக்குள் நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தால் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறுக்கு விசாரணையை தடைசெய்ய வேண்டும் என்று பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மாதம் 27ம் தேதி வரை இம்மனுவை ஏற்றுக்கொள்வதாகவும், இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
அதையடுத்து, பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மாறும் வரை, இங்கு இந்த வழக்கு நடைபெற்றால் நிர்மலாதேவிக்கு எதிராக தீர்ப்பு வரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அவரது தூண்டுதலால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நேரடியான தலையீடு உள்ளதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று கருதுகிறேன். வேறுமாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டும்.
அப்போதுதான் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்கிறோம். ஆகவே, அதுவரை இங்கு வழக்கு நடக்கக் கூடாது என தடை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். பேட்டியின்போது பேராசிரியை நிர்மலாதேவியும் உடனிருந்தார்.