தமிழகம்

தேனி அருகே கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு குலுக்கல் முறையில் ஆள் தேர்வு?- தேர்தல் அதிகாரிகள் விசாரணை

என்.கணேஷ்ராஜ்

தேனி அருகே ஸ்ரீரெங்கபுரம் கிராம ஊராட்சியில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கிராமமக்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கும், இதுர 6 ஒன்றியங்களுக்கு 30-ம் தேதியும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுவை பலரும் ஆர்வமுடன் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் இதுவரை யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. இங்கு ஊராட்சித்தலைவர், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன.

இதில் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3-வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண் வார்டாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 2ஆயிரத்து 519வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆயிரத்து 285 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர்.

இந்நிலையி்ல் இன்று காலை இங்குள்ள திருமண மண்டபத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடினர்.

தேர்தல் நடைபெற்றால் செலவு, வீண்பகை உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே போட்டியிட விரும்புபவர்களின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றனர். இதற்கு அனைவரும் ஒத்துக்கொள்ளவே, போட்டியிட விரும்புபவர்களின் பெயர்கள் எழுதி வார்டு வாரியாக குலுக்கல் போடப்பட்டது.

ஒரு குழந்தையை சீட்டு எடுக்கச் சொல்லி அதில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் ஏல முறையில் தேர்வு செய்யவில்லை. குலுக்கல் முறையே நடத்தப்பட்டுள்ளது. சோழர்காலத்தில் இருந்தே குடவோலை முறை இருந்துள்ளது. இதனால் வேட்பாளர்களின் செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், ஓட்டு போடுவது தொடர்பான பிரச்னயும் இங்கு ஏற்படாது. கிராம ஒற்றுமைக்காகவே இதுபோன்று நடந்து கொண்டோம் என்றனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ம.பல்லவிபல்தேவிடம் கேட்ட போது, தற்போதுதான் இது குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது குறித்து வருவாய்த்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தின் சில பகுதிகளில் தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் இக்கிராமத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் தலைவர் வரை அனைத்து பதவிகளையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் இதற்கு உடன்படாத சிலர் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுக்களைப் பெற்று அவற்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT