பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: சிபிஎம், சிபிஐ அறிவிப்பு

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் இன்று (டிச.13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி தலைமையில் நாளை (டிச.14) சனிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்தியுள்ளது.

இதன் மூலம் இந்திய மக்களை மத அடிப்படையில் கூறு போடும் பேராபத்தினை உருவாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்பேராபத்தினை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேப்பாக்கத்தில் வரும் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT