பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரி-சென்னை இடையே 'மெமூ' ரயில்கள் இயக்கம் தொடக்கம்: டிசம்பர் 26 முதல் விழுப்புரத்துக்கும் தொடக்கம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி ரயில் நிலையத்தின் தரம் உயருகிறது. அதன்படி புதுச்சேரி-சென்னை இடையே 'மெமூ' ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி முதல் விழுப்புரம்-புதுச்சேரி இடையே மற்றொரு 'மெமூ' ரயில் இயக்கப்பட உள்ளது.

புதுச்சேரி-சென்னை இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை 6.35 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு காலை 10.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 8.25-க்குச் சென்றடையும்.

இந்த சேவை மெயின் லைன் எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட் என அழைக்கப்படும் 'மெமூ' ரயில்களாக மாற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து, புதுச்சேரி ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் வெங்கடேசன் கூறுகையில், '' 'மெமூ' ரயிலில் கழிவறை வசதியுண்டு. இன்ஜின் இருபுறமும் உள்ளது. அதனால் மாற்ற வேண்டியதில்லை. ஓட்டுநர் ஒருவர் இயக்குகிறார். வழக்கமான பயணிகள் ரயிலில் பத்து பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன.

பயணிகள் அமர வசதியான இருக்கைகள் முதல் பெட்டியிலிருந்து இறுதிப் பெட்டி வரை உள்ளன. அதேபோல் முதல் பெட்டி முதல் இறுதிப் பெட்டி வரை ரயிலுக்குள் சென்று வர முடியும்.

அடுத்த 'மெமூ' ரயில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் டிசம்பர் 26 முதல் இயக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT