தமிழகம்

தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்?- ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேசிய குடியுரிமை சட்ட மசோதவை அதிமுக ஆதரிப்பது ஏன் என்று ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு, தேச வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.அதனால் ஆதரித்தோம் எனச் சொல்லிக் கொள்கிறேன். இனியும், தமிழக மக்களுக்காக தமிழக மக்களின் நலனுக்காக உள்ள நல்ல விஷயங்களில் மத்திய அரசை ஆதரிப்போம்.அதே நேரத்தில் தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு எதிர்ப்பான விஷயங்களில் மத்திய அரசை எதிர்ப்போம் .

திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் மதவாத கட்சிகள். அவை சிறுபான்மையினரை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் பெரும்பான்மையினர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் எதிராக சிறுபான்மையினரைத் தூண்டி விடுகின்றன.

இலங்கைத் தமிழர் குடியுரிமை பிரச்சினை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை என்று கூறும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அன்று இலங்கை இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்தனர்? இலங்கைத் தமிழர் பற்றி பேச திமுக, காங்கிரஸுக்கு அருகதையே இல்லை. இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை குறித்து முதல்வர் மத்திய அரசிடம் பேசி முடிவு செய்வார் .

ஸ்டாலின் தனது முதல்வர் கனவு கானல் நீராகி போனதால் விரக்தியால் ஏதேதோ பேசுகிறார்" என்றார்.

தொடர்ந்து டிடிவி தினகரன் பற்றி பேசியபோது, "அதிமுகவினர் எங்களுடன் தான் இருக்கின்றனர் என்று டிடிவி தினகரன் கூறிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்குமிடத்தில் தான் அதிமுவினர் இருப்பார்கள்.

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி போல் மீண்டும் வெற்றி பெறுவோம். அதிமுகவிற்கு வெற்றி தான் இலக்கு. ஊராட்சிமன்ற தலைவர் பதவி விற்பனை நடப்பதாக ஊடகங்களின் செய்தி வந்ததை அடுத்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT