சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியதைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த மாதம் 9 ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இதுதவிர மற்ற மாணவ, மாணவிகள் மரணம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால், அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தேசியத் தலைவரான கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று (டிச.13) தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்யநாரயணன், ஹேமலதா அமர்வு, இந்த வழக்கை வேறு விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.