குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கிழித்தெறியும் உதயநிதி 
தமிழகம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கிழித்தெறிந்து போராட்டம்: உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கைது

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, உதயநிதி உள்ளிட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் தெரிவித்தார். இதன் மூலம் மசோதா சட்டமாக மாறும். அதிகாரபூர்வ அறிவிக்கையின் படி அரசு கெசட்டில் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது.

இந்தச் சட்டத்தின் படி டிச.31, 2014 வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், பவுத்தர்கள், கிறித்துவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா டிசம்பர் 9-ம் தேதியன்று மக்களவையிலும், டிசம்பர் 11-ம் தேதியன்று மாநிலங்களவையிலும் கடும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே நிறைவேறியது.

இந்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது என, திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (டிச.13) உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெறும் என, திமுக அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை சைதாப்பேட்டையில் இன்று, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடியுரிமை சட்ட மசோதா நகலைக் கிழித்தெறிந்து உதயநிதி உள்ளிட்டோர், மத்திய அரசு, பாஜக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது உதயநிதி கூறுகையில், "இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அட்சியையும், அதற்குத் துணை போன அதிமுக ஆட்சியையும் இந்தப் போராட்டத்தின் வாயிலாகக் கண்டிக்கிறோம். சட்ட மசோதாவைத் திரும்பப் பெறும் வரை திமுக சார்பாக அத்தனை விதமான போராட்டங்களும் தொடரும். கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. திமுக தொண்டன் அஞ்ச மாட்டான். எந்த விதமான போராட்டங்களையும் சந்திப்போம். ஈழத்தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்த இரு தரப்பினரையும் பாஜகவும் அதிமுகவும் வஞ்சித்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT