டி.ஆர்.பாலு: கோப்புப்படம் 
தமிழகம்

கிராம குடிநீர் திட்டங்களில் தடங்கல்கள்: நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா? - டி.ஆர்.பாலு கேள்வி; நீர்வளத்துறை இணையமைச்சர் பதில்

செய்திப்பிரிவு

கிராம குடிநீர் திட்டங்களில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது குறித்து, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு, நேற்று (டிச.12) மக்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியாவிடம் கிராம குடிநீர் திட்டங்களின் நிலைமை குறித்து கேள்வியெழுப்பினார்.

அப்போது, அனைத்துக் குடும்பங்களுக்கும் சுகாதார குடிநீர் வழங்கப்படவிருந்த கிராம குடிநீர் திட்டங்களில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதை, இந்திய தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருப்பது குறித்து அரசின் பதில் என்ன எனவும், மாநில நீர் மற்றும் சுகாதார குழுமங்களின் மூலம் திட்டத்திற்கான நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா எனவும், செலவழிக்கப்படாத நிதிக்கு முறையான வட்டி பெறப்படுகிறதா எனவும் மக்களவையில் டி.ஆர்.பாலு நீர்வளத்துறை இணையமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

2012-2017 ஆம் ஆண்டுக்கான இடைவெளியில், தேசிய கிராம குடிநீர் திட்டத்திற்கான நிதி, மத்திய அரசால் குறைக்கப்பட்டு மாநிலங்களின் நிதி ஆதாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மாநில அரசுகளால் செலவழிக்க இயலவில்லை என இந்திய தணிக்கையாளர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலின் விவரம்:

"2014-2015 ஆம் ஆண்டு முதலாகவே, மத்திய அரசின் நிதியும் மாநில அரசின் நிதியும் கிராம குடிநீர் திட்டங்களுக்காக மாநில நீர் மற்றும் சுகாதார குழுமங்களின் மூலம் செலவிடப்பட்டு வருகிறது. 2019-20 ஆம் ஆண்டின் நீர் ஆதார திட்டத்தின் மத்திய அரசின் முதல் தவணை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. செலவழிக்கப்படாத நிதிக்கு முறையான வட்டித் தொகை பெறப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது" என பதிலளித்தார்.

SCROLL FOR NEXT