டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வழக்கில் அண்மையில் பிடிபட்ட தவமணி மனைவி புதுச்சேரி ஜிப்மரில் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் தவமணி(33). டிஎன்பிஎஸ்சி வினாத் தாள் வெளியான வழக்கில் தொடர்புடையவர். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்ப முயன்றதால் திருச்சி சிறைக்கு மாற்றப் பட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் வழக்கு ஒன்றுக்காக புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருச்சி சிறையிலிருந்து அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அதையடுத்து திரும்பி அழைத்து வரும் வழியில் கர்நாடக மாநிலத்தில் ரயிலில் இருந்து அவர் தப்பினார். இதனால், திருச்சி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீஸார், 4 சிறைக் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருச்சி தனிப்படையில் தேடி வந்தனர். இந்நிலையில் தனது மனைவி சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் இருந்த போது தவமணி அண்மையில் திருச்சி போலீஸாரால் கைதானார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அவரது மனைவி இறந்து பிரேத பரிசோதனை நேற்று நடந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருந்த ஸ்ரீபெரும்பதூர் போலீஸார் கூறுகையில்
போலீஸாரிடமிருந்து தப்பிய பின்பு சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், மனைவி எழிலரசியுடன் தவமணி தங்கியுள்ளார். அண்மையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், எழிலரசி தீக்குளித்துள்ளார்.
படுகாயமடைந்து அவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தவமணி உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இதனையறிந்த திருச்சி தனிப்படை போலீஸார் அண்மையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த எழிலரசி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி இறந்தார். தவமணி மனைவி எழிலரசிக்கு புதுச்சேரி ஜிப்மரில் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை நடைபெற்றது. அதையடுத்து அவரது உடல் எழிலரசி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.