தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஊர்க் கூட்டத்தில் ஒருமனதாகப் பேசி முடிவு செய்யப்பட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குரூ.32 லட்சம் தர வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக கிராம பெரியவர்கள் பங்கேற்ற ஊர்க் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.32 லட்சம்விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனடிப்படையில், திருமங்கலக்கோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்காக, ரூ.32 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பணமாக ரூ.2 லட்சத்தை உடனடியாக ஊர்ப் பஞ்சாயத்து பெரியவர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள ரூ.30 லட்சத்தை டிச.15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஊர் கூட்டத்தில் உறுதியளித்தபடி சுரேஷ் பணத்தைச் செலுத்தத் தவறினால், கிருஷ்ணமூர்த்தி டிச.15-ம் தேதி முழுத் தொகையையும் கட்ட வேண்டும். இந்தத் தொகை கோயில், பள்ளிக்கூடம் உள்ளிட்ட கிராம வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதால், இந்த முடிவுக்கு கிராம பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும் என ஊர்க் கூட்டத்தில் தீர்மானம் வாசிப்பது போன்றவீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகள் திருமங்கலக்கோட்டைக்குச் சென்று ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “திருமங்கலக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊர்க் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் எதுவும் விடப்படவில்லை. இதுதொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றார்.