பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு பெண் ராணுவ அதிகாரிகள் 20 பேருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுவர இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கும் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 4 வார பயிற்சி அளிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான பயிற்சி பரிமாற்றத்தின் மூலம் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இதில் உடல்ரீதியான பயிற்சி, ஆயுதத்தைக் கையாளுதல், தந்திரப் பயிற்சி, தலைமை பண்புக்கான பயிற்சி, மனிதவள மேம்பாட்டுக்கான பயிற்சி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்தியக் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளச் செய்யும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்பயிற்சி தங்களுக்கு புது அனுபவமாகவும், நவீன முறையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் பயனுடையதாகவும் அமைந்தது என ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகள் தெரிவித்தனர்.