தமிழகம்

ரூ.7 கோடி செலவில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சமயபுரம் அருகே ஷீரடி சாய்பாபாவுக்கு பிரம்மாண்ட கோயில்: நிறைவடையும் நிலையில் கட்டுமானப் பணிகள்; ஜன.20-ல் குடமுழுக்கு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில், ரூ.7 கோடியில் புதிதாக பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு வரும் ஷீரடி சாய்பாபா கோயிலின் குடமுழுக்கு விழா ஜன. 20-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக விருக்ஷா அறக்கட்டளை சார்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சாய்பாபா கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் கடந்த 21.04.2014-ல் சாய்பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை 22.10.2015-ல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 12.2.2016 முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தப் புதிய கட்டிடத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு பாபாவின் சமாதி மந்திர், விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தத்தாத்ரேயர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

நாமக்கல் என்.டி.சி. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் என்டிசி குழுமத்தின் தலைவர் கே.சந்திரமோகனை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் குழுவினர் மற்றும் பக்தர்கள் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜன.20 குடமுழுக்கு விழாஇக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் ஜன.17-ம் தேதி தொடங்குகின்றன. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, ஜன.20-ம்தேதி காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சாய்பாபா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT