டி.செல்வகுமார்
தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பதப்படுத்தி ‘டெட்ரா பேக்கில்’ அடைத்து 6 மாதங்கள் வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் தென்னைசாகுபடிப் பரப்பில் முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ம் இடத்திலும் தமிழகம் உள்ளது. தென்னை மரத்தின் மலராத தென்னம்பாளையில் இருந்து 'நீரா' பானத்தை இறக்கவும் அதைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி விற்கவும் தமிழக அரசு 2017-ம் ஆண்டு அனுமதி வழங்கியது.
மத்திய அரசின் தென்னைவளர்ச்சி வாரியத்திடம்பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நீரா பானம் இறக்க உரிமம் வழங்கி வருகிறது.
இதுகுறித்து வேளாண் விற்பனைத் துறை உயர் அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 12 தென்னை உற்பத்தி நிறுவனங்கள் நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்கின்றன. தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீரா பானம் ஐஸ் பாக்ஸில் வைக்கப்படுகிறது. இதை 2 நாட்களுக்குள் விற்பனை செய்தாக வேண்டும்.
இதனால் நீரா பானம் இறக்குவதற்கான ஆட்கள் பற்றாக்குறை, ஐஸ் பாக்ஸில் எடுத்துச் செல்ல ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கிடும்போது விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை.
அதனால் இலங்கை, கேரளாவைப் போல நீரா பானத்தைப் பதப்படுத்தி டெட்ராபேக்கில் அடைத்து 6 மாதங்கள் வரை விற்பனை செய்வதற்கான ஆராய்ச்சியில், கோவை வேளாண் பல்கலைக்கழகமும் தஞ்சாவூர் மத்திய உணவு பதப்படுத்தும் ஆய்வு மையமும் ஈடுபட்டுள்ளன.
கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் தென்னை உற்பத்தி நிறுவனங்கள் கடந்த 5-ம் தேதி வரை 7 லட்சத்து 20 ஆயிரத்து 180 லிட்டர் நீரா பானம் உற்பத்தி செய்துள்ளன.
இதன் மதிப்பு ரூ.9 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரம். மேலும், ரூ.98 லட்சத்து 854 மதிப்புள்ள 17 ஆயிரத்து 849 கிலோ எடையுள்ள மதிப்பு கூட்டப்பட்ட நீரா பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் நீரா பானம் மூலம் ரூ.10 கோடியே 76 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.