காவல்துறையின் தொடர் முயற்சியால் பெண்கள் பாதுகாப்புக்கான காவலன் செயலியை இதுவரை 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இன்று (12.12.2019) காலை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்களை (Awareness Pamphlets) மருத்துவக் கல்லூரி மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கினார். அதன்படி மருத்துவக்கல்லூரி மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:
“இந்தச் செயலி பெண்கள் பாதுகாப்புக்காக சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. காவல் உதவி தேவை என்றால் சிவப்பு பட்டனை ஒரு டச் செய்தால்போதும், உதவி உங்களைத் தேடி வரும். ஆனால் இப்படிப்பட்ட சிறப்பான செயலியை ஒருகோடிபேர் வசிக்கும் சென்னையில் மிகக்குறைவாகவே டவுன்லோடு செய்திருந்தனர்.
அப்படியானால் இதை மக்களிடம் கொண்டு சென்று அதிக அளவில் பதிவிறக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது பெரிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். அனைத்துக் காவல் அதிகாரிகளும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இது குறித்த பிரச்சாரத்தை செய்தோம்.
கடந்த 5-ம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். 9-ம் தேதி வரை 5 நாட்களிலில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இன்னும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக பெண்கள் பதிவிறக்கம் செய்தால் இந்த எண்ணிக்கை பெருமளவில் உயரும்.
இன்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்றால் சென்னை என்று பதிவிட்டுள்ளது. சென்னை நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதால் பெண்களிடம் நகை பறிக்கும் குற்றச்செயல்கள் 50% குறைந்துள்ளது. பெண்களிடம் நகை பறிப்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது”.
இவ்வாறு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை கூடுதல் ஆணையர் (வடக்கு) தினகரன் , வடக்கு மண்டல இணை ஆணையர் கபில்குமார் சரத்கர், பூக்கடை துணை ஆணையாளர் S.ராஜேந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.