சபரிமலையில் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நெய்யின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அப்பம், அரவணை போன்ற பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் பற்றாக்குறை நீங்கியுள்ளது என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் கடந்த நவ.16-ல் நடைதிறக்கப்பட்டு 17-ம் தேதி முதல் மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
பக்தர்கள் முத்திரை தேங்காயில் நெய் ஊற்றி அதை அபிஷேகத்திற்காக கொண்டு வந்து தருவர். பின்பு பிரசாதமாக சிறிதளவு பெற்றுச் செல்வர். பக்தர்கள் தரும் நெய்யை தேவசம் போர்டு அதிகாரிகள் அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்திக் கொள்வர். இதற்காக தினமும் 4,500லிட்டர் நெய் தேவைப்படும். இருப்பினும் கடந்த சில வாரங்களாக பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நெய்யின் அளவு போதவில்லை. எனவே தனியார் மூலம் நெய் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கேரளா, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நெய்யின் அளவும் அதிகரித்து வருகிறது.
நெய் அபிஷேகத்தைப் பொறுத்தளவில் அதிகாலை 3.30 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே நடைபெறும். பின்பு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து அலங்கார பூஜையே நடைபெறும்.
இதனால் பிற்பகலில் வரும் பக்தர்கள் மறுநாள் வரை காத்திருந்து அபிஷேகத்திற்கு நெய் கொடுத்து பிரசாதம் பெறும் நிலை இருந்தது. கடந்த ஆண்டு முதல் நெய் அபிஷேகத்திற்கான சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டது.
இதில் அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கொண்டு வரும் நெய் பெறப்பட்டு வருகிறது.
இதனால் பிற்பகலிலும் பக்தர்களிடம் இருந்து ஏராளமான நெய் கிடைப்பதால் நெய்யின் தேவை பூர்த்தியாகத் துவங்கி உள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், ஆரம்ப காலங்களில் தாருசிலை எனப்படும் மரத்திலான விக்கிரகம் இருந்ததால் நெய் அபிஷேக வழிபாடு நடைபெறவில்லை.
அதன்பின்பு இப்பழக்கம் உருவானது. கார்த்திகை இரண்டாவது வாரத்தில் இருந்து கேரளாவில் இருந்தும், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நெய் தேவை போதுமான அளவு இருப்பதால் தனியார் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.