ஆற்காட்டில் கட்டணமில்லாப் பேருந்து சேவையைத் தொடங்கி ரஜினியின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் ரஜினிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, அவருடைய ரசிகர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காட்டில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கலவை கிராமம் வரை இன்று கட்டணம் இல்லா தனியார் பேருந்து சேவையை ஆற்காடு நகரம், ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றம் சார்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். ஆற்காட்டில் இருந்து கலவை வரை இன்று 7 முறை இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது.