ஆட்டோவுக்கான டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜிபிஎஸ் கருவி கொள்முதல் தொடர்பான வழக்கில் தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் செப்டம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை நகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
அனைத்து ஆட்டோக்களிலும் வாடகை ரசீது வழங்கும் வசதியுள்ள டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி போக்குவரத்துத் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டார். இந்த கருவி, அரசால் இலவசமாக வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.80.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருவிகள், 2014-ம் ஆண்டு பிப்.28-ம் தேதிக்குள் கொள்முதல் செய்யப்பட்ட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், ஆட்டோ மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கான நட வடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை. இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகம் வசூலிப்பதாக புகார்கள் கூறப் படுகின்றன. ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திவிட்டால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காது.
அதற்காக ஏற்கெனவே அரசு அறிவித்தபடி டிஜிட்டல் மீட்டர், ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்தாண்டு நவம்பர் 24-ம் தேதி போக்குவரத்துத் துறை செயலாளருக்கு மனு கொடுத்தோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டமும் நடத்தப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே, அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஆட்டோக் களுக்கான டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனுவுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மூன்று வாரத்துக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ரூ.10 ஆயிரம் வழக்கு செலவாக செலுத்த நேரிடும். வழக்கு விசாரணை செப்டம்பர் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.