தமிழகத்தில் மொத்தம் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. 6 மேயர் பதவிகள் பொதுவானதாக அறிவிக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, ஆவடி, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய மாநகராட்சிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
50 சதவீத இடஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக 50 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு அரசிதழில் வெளி யிட்டுள்ளது.
அதன்படி திருச்சி, திருநெல் வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 7 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கான பொதுவான இடங்களாக அறிவிக்கப்பட்டுள் ளன. எஸ்.சி. வகுப்பினருக்கு 2 மேயர் பதவிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. வேலூர் மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி. வகுப்பு பெண்களுக்கும், தூத்துக்குடி மேயர் பதவி எஸ்.சி. வகுப்பின ருக்கு பொதுவாகவும் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் உள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 8 மேயர் பதவிகள் பெண்களுக்கு கிடைத்துள்ளன.
மீதமுள்ள சென்னை, ஆவடி, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், ஓசூர் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவிகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 மேயர் பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிட லாம்.
தமிழகத்தில் 3 ஆண்டுகள் தாம தத்துக்குபிறகு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டும் 2 கட்டமாக தேர் தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கட்சிகள் தீவிரம்
இதையடுத்து, திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. இதனால், தேர்தல் பணி களில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கட்சி சார்பற்ற முறையில் நடைபெறும் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி யிட அந்தந்தப் பகுதி மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் படவில்லை. இந்த முறை மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் வார்டு உறுப்பினர்கள் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்வு செய்வார் கள். எனவே, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவராக விரும்புபவர்கள் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற வேண் டும்.