மதச் சார்பற்ற இந்திய தேசத்தில் அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா மக்களைப் பிரிக்கும் ஒன்று. தயவுசெய்து தேசத்தைப் பிரிக்காதீர்கள் என காமெடி நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு விரோதமானது எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையில் கடுமையாகப் பேசின.
தஞ்சம் தேடி வரும் அண்டை நாட்டு இஸ்லாமிய மக்கள், இலங்கை தமிழர்களுக்கு இந்த மசோதா அனுமதி மறுக்கிறது. இதைப் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக இந்த மசோதாவை ஆதரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பலரும் எதிர்த்து வரும் வேளையில் திரையுலகில் இருந்தும் எதிர்ப்புக் குரல் வரத் தொடங்கியுள்ளது. காமெடி நடிகர் கருணாகரன் இந்த மசோதா குறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவின் தமிழாக்கம்:
“மதச் சார்பற்ற இந்திய தேசத்தில் மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள். தயவுசெய்து வாக்குகளுக்காகச் சார்ந்திருக்காதீர்கள். ஒரு தேசம் அதன் நலனுக்காக மட்டுமே அரசைச் சார்ந்திருக்க வேண்டும். தயவுசெய்து தேசத்தைப் பிரிக்காதீர்கள். நம்மை ஏற்கெனவே ஆங்கிலேயர்கள் பிரித்துவிட்டார்கள்”.
இவ்வாறு கருணாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.