தமிழகம்

உடலை வேறு யாரிடமும் ஒப்படைக்க கூடாது: சசிபெருமாளின் மனைவி, மகன் கோரிக்கை

செய்திப்பிரிவு

‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை காந்திய வாதி சசிபெருமாளின் உடலை வாங்கமாட்டோம். அவர் உடலை வேறு யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது’ என சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன் நவநீதன் கூறினர்.

நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன் நவநீதன் வந்தனர். திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனுவை பெற்றுக் கொண்டார்.

அந்த மனுவில், ‘சேலம் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். நாங்கள் அமைதி யான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மகிழம், நவநீதன் ஆகியோர் கூறிய தாவது: சசிபெருமாளின் கோரிக் கையை ஏற்று, பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்தும் வரை, அவரது உடலை வாங்குவதில்லை என முடிவெடுத்துள்ளோம். எனவே, எங்கள் குடும்பத்தை தவிர அரசு அதிகாரிகள் உட்பட வேறு யாரிடமும் அவரது உடலை ஒப்படைக்க கூடாது. அவரது உடலை வேறு எந்த அரசு மருத்துவமனைக்கு மாற்றவும் கூடாது.

எங்களது மனநிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், குறைந்தபட்சமாக பள்ளி, கல்லூரி, கோயில் என மக்கள் கூடும் இடத்தில் உள்ள மதுக்கடைகளையாவது அகற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT