சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம் 
தமிழகம்

வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாததால் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்

ந. சரவணன்

வாணியம்பாடி அடுத்த நெக்னாமலைக்கு விரைவில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, மின் விளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மலைவாழ் மக்கள் பரிதாபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நெக்னாமலையில் அரசு தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. மலை மீது உள்ள பள்ளிக்கு வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே ஆசிரியர் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. மற்ற நாட்களில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்காமல் வீடு திரும்புகின்றனர். இது மட்டுமின்றி மலையில் இருந்து வாணியம்பாடி நகர் பகுதிக்கு வர வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்து வர வேண்டியுள்ளது.

சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மலையில் இல்லாததால் இங்கு வசிக்கும் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இதனால், மலையில் வசிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே செல்வதாகவும், மலைவாழ் மக்களின் அடையாளம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், மலையில் வசிக்கும் பெண்கள், முதியோர், குழந்தை, கர்ப்பிணி போன்றவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 'டோலி' கட்டி சுமந்து வரும் அவலம் இன்று வரை தொடர்கிறது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினர், ஆட்சியாளர்கள் என பலரிடம் புகார் தெரிவித்தும் நெக்கனாமலைக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர கடந்த 70 ஆண்டுகளாக யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சாலை வசதி கேட்டு போராடி வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெக்னாமலையைச் சேர்ந்த முனுசாமி (28), என்பவர் கோவையில் கட்டிட வேலைக்காகச் சென்ற போது அங்கு மின்சாரம் தாக்கி நேற்று (டிச.10) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் வாணியம்பாடிக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மலைக்கிராமத்துக்கு முனுசாமியின் உடல் டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கொண்டு சென்றனர்.

முனுசாமியின் மனைவி அனிதா (23) தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவரும் கணவர் உடலுடன் 7 கிலோ மீட்டர் தொலைவு மலை மீது நடந்து செல்ல முடியாமல் மயங்கி விழுந்தார். பிறகு அவர் மயக்கம் தெளிந்த பிறகு மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு 10 மணிக்குச் சென்றவர்கள் நள்ளிரவு 2.50 மணிக்கு மலையை அடைந்தனர். அங்கு முனுசாமியின் உடலுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற சம்பவங்களை பார்த்தாவது அரசு மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டம், உருவானபோதே நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இது பற்றி வருவாய்த் துறையினருடன் தனியாக ஆலோசனையும் நடத்தப்பட்டது. அங்கு வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தான் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். வனத்துறையினர் இடத்தைக் கையகப்படுத்தினால், அதற்கு ஈடாக 2 மடங்கு இடத்தை வனத்துறைக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

மலையடிவாரத்தில் இருந்து நெக்னாமலைக்குச் செல்ல தனியாக சாலை வசதிகள் செய்து கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதி மட்டுமின்றி, குடிநீர், பொது சுகாதாரம், மின்விளக்கு, கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர திட்ட அறிக்கையும் தயார் நிலையில் உள்ளது. வனத்துறையினருடன் இன்னும் சில பேச்சுவார்த்தைகள் பாக்கியுள்ளன. அதை முடித்த பிறகு, அரசு அனுமதியுடன் நெக்னாமலைக்கு தார்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT