தமிழகம்

‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ பெயர்ப்பலகை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

அடையாறு காந்தி நகர் 4- வது பிரதான சாலைக்கு புதிதாக சூட்டப்பட்ட ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என்ற பெயர்ப்பலகையை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்துவைத்தார்.

பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் ‘மாலை முரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன். அவரது வீடு அமைந்துள்ள அடையாறு காந்திநகர் 4- வது பிரதான சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘மாலை முரசு’ நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர மேயருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையேற்று கடந்த 3-ம் தேதி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி நகர் 4-வது பிரதான சாலை, ’பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என பெயர் மாற்றம் செய்து 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பெயர் மாற்றப்பட்ட சாலையின் புதிய பெயர்ப்பலகை திறப்பு நிகழ்ச்சி, அடையாறில் இன்று காலை நடந்தது. ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என்ற பெயர்ப்பலகையை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று திறந்துவைத்தார்.

முன்னதாக காலை 11 மணிக்கு அடையாறு காந்தி நகர் பகுதிக்கு வந்த முதல்வரை தமிழக அமைச்சர் வேலுமணி, ‘மாலை முரசு’ இயக்குநர் கண்ணன் ஆதித்தன், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திர ஆதித்தன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், பின்னர் பெயர்ப்பலகையை திறந்துவைத்தார்.

ராமச்சந்திர ஆதித்தனின் மனைவி பங்கஜம் அம்மாள், மகனும் ‘மாலைமுரசு’ இயக்குநர்களில் ஒருவருமான ஆர்.கதிரேசன் மற்றும் குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணன் ஆதித்தன் அறிமுப்படுத்தி வைத்தார். அவர்களுடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவர்கள் அனைவரும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சமக எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT