திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடை பெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்ப மானது. 63 நாயன்மார்கள், வெள்ளி தேரோட்டம், மகா தேரோட்டம் (பஞ்ச ரதம்) மற்றும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-வது நாள் உற்சவத்தில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டன. ‘ஏகன் அநேகன்’ என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அண்ணா மலையார் கோயில் மூலவர் சந்நிதி முன்பு நேற்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப் பட்டது. பின்னர், பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி
இதையடுத்து, சிறப்பு அலங் காரத்துடன் பஞ்சமூர்த்திகள் ஒவ்வொருவராக தீப தரிசன மண்ட பத்தில் மாலை 5.30 மணிக்கு எழுந் தருளினர். பின்னர், ‘ஆணும் பெண் ணும் சமம்’ என்ற தத்துவத்தை உல குக்கு எடுத்துரைக்கும் வகையில் ‘அர்த்தநாரீஸ்வரராக’ காட்சிக் கொடுத்தார். அதன் பிறகு, தங்கக் கொடி மரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சி யில் மாலை 5.58 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ‘‘அண்ணாமலையாருக்கு அரோ கரா’’ என்ற பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சிக் கொடுப்பதால் கோயில் கருவறை மூடப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோபுரங்கள் உட்பட கோயில் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்தன. கோயில் மற்றும் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காண லாம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி நேற்று அதிகாலை 2 மணி யில் இருந்து பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். 14 கி.மீ., தொலைவு அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மகா தீபம் ஏற்றிய பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.
சுமார் 22 லட்சம் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (11-ம் தேதி) பவுர்ணமி என்பதால், பக்தர்களின் கிரிவலம் 2-வது நாளாக தொடரும். இதில் சுமார் 11 லட்சம் பக்தர்கள் கிரி வலம் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
மகா தீபத்தை தொடர்ந்து, ஐயங் குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் இன்றிரவு தொடங்குகிறது. முதல் நாளான இன்றிரவு சந்திரசேகரர், நாளை (12-ம் தேதி) இரவு பராசக்தி அம்மன், நாளை மறுதினம் (13-ம் தேதி) இரவு முருகர் ஆகியோரது தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பக்தர்களை போன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், 12-ம் தேதி (நாளை) சிறப்பு அலங் காரத்தில் கிரிவலம் செல்கிறார். இதையடுத்து, வெள்ளி ரிஷப வாக னத்தில், 14-ம் தேதி இரவு நடைபெறும் சண்டகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதேபோன்று திருப்பரங்குன் றம், திருச்சி மலைக்கோட்டை, பழநி கோயில்கள், தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் சிவாலயங் களில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.