அமைதியான யூனியன் பிரதேச மான புதுச்சேரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. ஆனால், தற்போது இங்கு பழிவாங்கலுக்காக கொலைகள் அதிகரித்துள்ளன. வாரந்தோறும் ஒரு கொலை நிகழ்வு நடந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதி யைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியரான லோகநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த சில மாதங் களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் கொலைக்கு நடந்த பழிவாங்கல் சம்பவம் இது. இச்சம்பவம் தொடர்பாக பாண்டிய னின் தாய், சகோதரி, மகன் தொடங்கி 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தியால் பேட்டை போலீஸார் நடத்திய விசாரணை தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் நேரடியாகச் சென்று நேற்று காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினார். இப்பகுதி யிலுள்ள ரவுடிகள் விவரம், போலீ ஸார் கண்காணிப்பு, லோகநாதன் கொலைத்தொடர்பாக பிடிப்பட் டோர் விவரம் தொடர்பாக கேட்ட றிந்தார்.
காவல் நிலையம் முற்றுகை
இதற்கிடையே, புதுச்சேரி கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் சமுதாய நலக்கூடத்தில் அப்பகுதி சிறார்கள், சிறார்களை கேரம் போர்டு தொடங்கி பல விளையாட்டுகள் விளையாடுவது வழக்கம். அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் இவர்களை விரட்டி விட்டு, மது அருந்தி கஞ்சா புகைத்து வந்துள்ளனர். போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கையே இல்லை.
நேற்று காலை அங்கு கேரம் போர்டு விளையாடியோரை விரட்டி விட்டு, கேரம் போர்டு உள்ளிட்ட வற்றை ரவுடிகள் உடைத்துள்ளனர்.
இதில் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் மீண்டும் உறுதி அளித்தனர். "கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தொடங்கி பலரும் சமுதாய நலக்கூடத்தையே சேதப்படுத்துகின்றனர். பலமுறை புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கையே எடுப்பதில்லை" என்று இப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் ரவுடி ஜனாவை பிடிக்க திருபு வனை அருகே கரும்புக் காட்டுக் குள் சென்ற போலீஸாருக்கும் ரவுடிகளுக்கும் ஏற்பட்ட மோத லில் போலீஸ்காரர் காயமடைந் துள்ளார். ஆனால் முக்கிய ரவுடி ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்று விட்டனர். அவர் களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிகரிக்கும் கொலைகள்
"புதுச்சேரியில் முன்பெல்லாம் கொலை சம்பவங்களே இருக் காது. அமைதியான ஊர். தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித் துள்ளது வேதனை தருகிறது" என்கின்றனர் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர்கள்.
சமூக சூழல்களை ஆய்வு செய் வோர் தரப்பில் இதுபற்றி கேட்ட தற்கு, "புதுச்சேரியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்வது அதிகரித்துள்ளது. சர்வசாதாரணமாக புதுச்சேரி பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.
நடப்பாண்டில் 27 கொலைகள் புதுச்சேரியில் நடந்துள்ளன. கடந்த 2016ல் 32 கொலைகளும், 2017ல் 25 கொலைகளும், 2018ல் 29 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பாண்டு நடந்த கொலைகளில் 14க்கும் மேற்பட்ட சம்பவங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள் ளன" என்று குறிப்பிட்டனர்.
உறக்கத்தில் உளவுத்துறை
இளையோருக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழல் அதிகரித் துள்ளது. ரவுடிகள் மோதலும் மறுபுறம் அதிகரித்துள்ளது. பல ரவுடிகள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர். மோதலை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டிய உளவுத்துறையோ உறக்கத்தில் உள்ளது.
கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையோ ரவுடிகளுக்குள் தானே மோதல் நடக்கிறது என நினைக்கிறார்கள்.
இப்படியாக முன் எப்போதும் இல்லாத மோசமான சூழல் புதுச்சேரியில் நிலவுகிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர் புதுச்சேரியின் நலனில் அக்கறை கொண்டவர்கள்.