தமிழகம்

செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?- பொதுமக்கள் பீதி; வனத் துறையினர் மறுப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே நாயை சிறுத்தை கடித்துக் குதறியதாக கூறப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஆனால் வனத் துறையினர் இதை மறுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த செங்குன்றம் பகுதியில் நேற்று அதிகாலையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று நாயை கடித்து இழுத்துச் சென்றதை பார்த்ததாக தெரிவிக்கின்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, வனத் துறையினர் செங்குன்றம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த விலங்கின் காலடித் தடம், கடிபட்ட நாய் ஆகியவற்றையும், சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களையும் ஆய்வுசெய்தனர். மேலும் அந்த கிராம மக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு வனச் சரக அலுவலர் பாண்டுரங்கன் கூறும்போது, ‘‘கடிபட்ட நாயின் மீதுள்ள காயங்கள், காலடித் தடங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அந்த விலங்கு ஓநாய் அல்லது ஹைனா எனப்படும் கழுதைப்புலி இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். இருப்பினும் சிறுத்தையின் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. இதனால் தற்போது இப்பகுதியில் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த இடத்தில் கூண்டு வைத்து அதை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆடு, மாடுகளை, வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவைக்க வேண்டும். கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம். பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும். வீட்டின் முகப்பில் விளக்கை எரியவிட வேண்டும் என்று கிராம தலையாரி மூலம் தண்டோரபோட அறிவுறுத்தப்பட்டுள்ளது'’ என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவத்தால் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT