கூட்டுறவுத் துறையின் நடமாடும் கடை மூலம் தலைமைச் செயலகத்தில் விற்பனை செய்யப்பட்ட 2 வகையான வெங்காயங்களை அரசு ஊழியர்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
பருவமழை பாதிப்பால் உற்பத்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.180, சின்ன வெங்காயம் ரூ.160 வரையில் விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.
இதற்கிடையில் தமிழக கூட்டுறவுத் துறை சார்பில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.40-க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப் பட்டு, நாசிக் உள்ளிட்ட அண்டை மாநிலங் களில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்கப் பட்டது. இதுதவிர, தற்போது எகிப்து நாட்டில் இருந்தும் 30 ஆயிரம் டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பண்ணை பசுமை நுகர்வோர் கடையின் நடமாடும் கடை யின் மூலம் தலைமைச் செயலகத்தில் 2 வகை வெங்காயங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு வகை வெங்காயம் இரண்டரை கிலோ ரூ.100க்கும், மற்றொரு வகை ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது.
வெங்காய விற்பனை பற்றிய தகவல் பரவியதும், தலைமைச் செயலக ஊழியர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகை முன் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். வெங்காயம் வாங்குவதற்கு உரிய பையும் அருகிலேயே ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த பையை வாங்கி வந்து, அரசு ஊழியர்கள் வெங்காயத்தை பெற்றுச் சென்றனர்.