தமிழகம்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு: சேலத்திலும் சரக்குகள் சேதம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு அதன் வழியாக எரியும் டயரை செலுத்தியதில் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி குருபரபள்ளி ஆவல்நத்தம் சாலையில் இருக்கிறது டாஸ்மாக் கடை 3037. இக்கடையில் பணிபுரியும் தணிகைமலை என்ற ஊழியர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் கடைக்குள் இருந்து பெரும்புகை கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்து பொதுமக்கள் சிலர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் கடை திறந்தனர். அப்போது கடையின் சுவரில் ஒரு துளை இருந்தது. கடைக்குள் எரிந்த நிலையில் ஒரு டயரும் காணப்பட்டது. சுவரில் துளையிட்டு கடைக்குள் டயரில் தீ வைத்து போட்டதாலேயே விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துள் கடைக்குள் இருந்த மதுபாட்டில்களில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. ஆடிப் பெருக்கு என்பதால் மதுபான பிரியர்கள் அதிகளவில் கடைக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடையில் இறக்கப்பட்டிருந்தன.

சேலத்திலும் தாக்குதல்:

கிருஷ்ணகிரி சம்பவத்தைப் போல், சேலம் பன்னக்காடு கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மர்ப நபர்கள் சிலர் இன்று அதிகாலை தீ வைத்துள்ளனர்.

மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது சொந்த ஊருக்கு அருகில் உள்ள பன்னக்காடு எனும் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு இன்று அதிகாலையில் தீ வைக்கப்பட்டுள்ளது.

கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையில் துளையிட்டு அதன் வழியாக நெருப்பை வீசி சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். தகவலறிந்து சூரமங்கலம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. 25 அட்டைப் பெட்டிகளில் இருந்த மது பாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன. கொண்டாலம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT