தமிழகம்

மாணவி சுவாதிக்கு உதவிய 4 பேர்

சி.கண்ணன்

சுவாதியும், அவரது தாயாரும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்துள்ளனர். அங்கிருந்த காவலாளி, ‘இங்கு கலந்தாய்வு ஏதும் நடக்கவில்லை. நீங்கள் தவறுதலாக வந்துள் ளீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயும் மகளும் கண்ணீருடன் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு நடைபயிற்சி யில் ஈடுபட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக உதவி நூலகர் ஆர்.பாண்டியன், மாணவி சுவாதி யிடம் விசாரித்தார். இதைப் பார்த்ததும் நடைப்பயிற்சிக்கு வந்த ஐடி நிறுவன ஊழியர் சரவணனும் அங்கு வந்தார். மாணவியிடம் இருந்த அழைப்புக் கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்தார். ‘‘கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கலந்தாய்வுக்கு செல்ல வேண்டிய நீங்கள், தவறுதலாக இங்கு வந்துவிட்டீர்கள். கோவையில் காலை 8.30 மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். எப்படி உங்களால் போக முடியும்’’ என்று கேட்டார்.

‘‘தெரியாமல் வந்துவிட்டோம்’’ என்று தாயும், மகளும் கதறி அழுதனர். அவர்களின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு கூட்டம் கூடியது. நடைபயிற்சி யில் ஈடு பட்டிருந்த இன்னொரு ஐடி நிறுவன ஊழியர் பரமசிவம், நடந்த விவரத்தை அறிந்ததும், ‘கவலைப்படாதீர்கள். உங்களை விமானத்தில் கோவைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறி, இருவருக்கும் விமான டிக்கெட் எடுக்கச் சென்றார். அதே இடத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தனியார் நிறுவன ஊழியர் ஜெய்சங்கர், தனது நண்பர்களின் உதவியுடன் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சுவாதி பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். ‘‘மாணவியையும் அவரது தாயாரையும் விமானத்தில் அனுப்பி வைக்கிறோம். தயவுசெய்து மாணவியை கலந்தாய்வில் அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தரும் மாணவி கலந்தாய் வில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இருவரும் கோவை செல்வதற்காக ரூ.9,500-க்கு விமான டிக்கெட் எடுத்து வந்த பரமசிவம், அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக உணவகத்தில் காலை உணவு வாங்கிக் கொடுத்து, தனது காரிலேயே ஏற்றிச் சென்று விமான நிலையத்தில் இறக்கி விட்டார். வழிச் செலவுக்கு ரூ.500 கொடுத்து அனுப்பினார்.

மாணவி மற்றும் அவரது தாயாரை கோவைக்கு அனுப்பி வைத்ததற்கான செலவை பாண்டியன், சரவணன், பரம சிவம், ஜெய்சங்கர் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

மனிதாபிமானமிக்க இவர்களின் உதவிக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

SCROLL FOR NEXT