வெங்காய இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் சரியான ரசீது வைத்திருக்க வேண்டும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் இன்று (டிச.10) குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"வெங்காயத்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மற்றும் இன்னும் விலை உயரும் என்ற காரணத்திற்காக அதனை பதுக்கி வைப்பவர்கள் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயம் பதுக்கலைத் தடுக்க மாவட்டம் தோறும் ஒரு ஆய்வாளர் தலைமையில் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
மொத்த வியாபாரிகள் 50 டன் வரையும், சில்லறை வியாபாரிகள் 10 டன் வரையும் வெங்காயத்தை வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் கையிருப்புக்கும் முறையான ரசீது பெற்றிருக்க வேண்டும். வெங்காயத்தை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை, தமிழகத்தில் வெங்காயத்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்குவது தொடர்பான புகார்கள் வரவில்லை. அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால், பொதுமக்கள் 9840979669 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்" என தெரிவித்தார்.