தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்களின் சாலை மறியல் போராட்டமும் தொடர்கிறது.
தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் இரவு பகலாக தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் நிலத்தடி நீர் ஊற்றெடுப்பதாலும் தண்ணீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்ட போதிலும் பெரும்பாலான இடங்களில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக பிரையன்ட் நகர், சிதம்பரநகர், திருச்செந்தூர் சாலை, ராஜகோபால் நகர், ராஜபாண்டி நகர் போன்ற பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
மக்கள் அவதிஇதேபோல் புறநகர்ப் பகுதிகளான பாரதிநகர், எஸ்பிஎம் நகர், அல்போன்ஸ் நகர், புஷ்பா நகர், அன்னை தெரசா நகர் போன்ற பகுதிகளில் கடந்த அக்டோர் 16-ம் தேதி முதல் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
வீடுகளைச் சூழ்ந்து தெருக்கள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், ஒரு மாதத்துக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை மறியல்இதற்கிடையே, ராஜகோபால் நகர் மற்றும் ராஜபாண்டி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் மில்லர்புரம் சந்திப்பு பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால், தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், காவல் ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், கிருஷ்ணகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.