தமிழகம்

ஏலத்தில் பதவிகள் விற்பனையா?- தேர்தல் விதிமீறலின் கீழ் நடவடிக்கை வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் புகார்

செய்திப்பிரிவு

ரூ.50 லட்சம், ரூ.15 லட்சம் என பதவிகள் ஏலம் விடப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம், நடுக்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத்தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தேர்தல் ஆணையத்துக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் அனுப்பியுள்ளது.

அவர்கள் அனுப்பிய புகாரில் தெரிவித்திருப்பதாவது:

“கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டதாக தனியார் தொலைக்காட்சியில் 09-12-2019 அன்று மதியம் 3.30 மணியளவில் செய்தி ஒளிபரப்பானது. ஏலம் விடப்படுவது குறித்தான வீடியோ காட்சிகளும் காட்டப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் இது “ஓட்டுக்கு மறைமுகமாகப் பணம் தரும்” தேர்தல் குற்றமாகும். எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கீழ்க்கண்ட விஷயங்களை உள்ளடக்கி அறிவிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுகிறோம்.

1. இதுபோன்று பதவிகளை ஏலம் விடுவது சட்டத்திற்குப் புறம்பானது.

2. இதற்கும் ஓட்டுக்குப் பணம் வாங்குவதற்கும் வித்தியாசமில்லை.

3. இதுபோன்று ஏலம் விடப்படும் சம்பவத்தில் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தில் பங்கேற்றவர்கள் போன்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

4. தற்போது ஏலம் விடப்பட்ட நடுக்குப்பம் ஊராட்சியில் தேர்தலை ரத்து செய்துவிட்டு நியாயமான முறையில் தேர்தல் நடத்த வழிவகை செய்யவேண்டும்''.

இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT