கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. பதவியை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமப் பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்தப் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏலம் விடப்பட்டதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 1,900 ஓட்டுகள் உள்ள இந்தப் பஞ்சாயத்தில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன.
இந்த கிராமப் பஞ்சாயத்தில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வந்தவுடன் முன்னர் ஊராட்சித் தலைவராக இருந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த சக்திவேல் தனக்கே ஊர்த்தலைவர் பதவியைத் தரவேண்டும் என கிராம மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர் பதவியை ஏலம் விடுவது எனவும், ஏலத்தில் எடுப்பவரே நிர்வாகிகள் எனவும், அன்னபோஸ்டாக (unopposed) அவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் தேர்தல் இல்லை என முடிவெடுத்து ஏலம் விடப்பட்டது.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் பதிவிக்கான ஏலம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோயிலில் இன்று நடைபெற்றது. அந்த ஏலத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ.50 லட்சத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த சக்திவேலும், துணைத்தலைவர் பதவியை ரூ.15 லட்சத்துக்கு தேமுதிகவைச் சேர்ந்த முருகன் என்பவரும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள், ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவராக இருந்த சக்திவேல் இந்த முறையும் பஞ்சாயத்துத் தலைவராகத் தொடர, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து, ஏலத்தொகையை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த இருவருக்கும் அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படாமல் தலைவர், துணைத்தலைவர் பதவி விற்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.