கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? உறவினர்கள் நாடகமாடுகிறார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் அடுத்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(35), லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி(32). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளது. இதில் ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ளது.
இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 5-ம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்த அவர் இன்று மதியம் படுக்கையில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியில் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது படுக்கையில் இருந்த குழந்தையைக் காணவில்லை.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கேட்டபோது தெரியாது என பதிலளித்ததால் குழந்தையை மருத்துவமனை முழுதும் தேடியுள்ளார். கிடைக்காததால் கிருஷ்ணகிரி நகர போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையை யாரேனும் கடத்தி சென்றனரா? என போலீஸார் விசாரணை நடத்தினர். அட்டெண்டர் யாரும் இல்லாமல் குழந்தையை எப்படி தனியாக தாய் விட்டுச் செல்வார் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மீண்டும் பெண் குழந்தையே பிறந்ததால் 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் இருப்பதால் பெற்றோரே குழந்தையை யாருக்காவது கொடுத்துவிட்டு அல்லது வேறு எதுவும் செய்துவிட்டு நாடகம் ஆடுகின்றனரா? என்ற கோணத்திலும் கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.