விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (டிச.9) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த விழுப்புரம், கே.கே ரோடில் வசிக்கும் தசரதன் என்கிற ராமசாமி கூறியதாவது:
"நான் தற்போது குடும்பத்தை விட்டு விலகி நாட்டுக்காக முழு நேரச் சேவை செய்து வருகிறேன். நான் வீரபாண்டிய கட்டபொம்மனின் மறு பிறவி. நம் நாட்டின் இயற்கை வளத்தை அழித்து, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, காலநிலை மாற்றம் செய்து நாசவேலை செய்துவரும் நிழல் தீவிரவாதிகள் பற்றி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் விசாரணை நடத்த தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, என் புகாருக்குத் தீர்வு கிடைக்கும் வரை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆண்கள் சிறை அறையில் ஒரு நாளில் 3 மணி நேரம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தியானப் போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளேன். இதற்கு அனுமதி அளித்தால் தமிழகத்தில் தலைகுனிந்துள்ள விவசாயம் செழிக்கும். நல்ல மழை பொழியும். எனவே என் தியானப் போராட்டத்திற்கு அனுமதியும், ஆதரவும் வழங்குமாறு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தேன்".
இவ்வாற்ய் ராமசாமி தெரிவித்தார்.
நேற்று வேட்டி மட்டும் கட்டிகொண்டு மேல் சட்டை அணியாமல் வந்த ஒருவர், "என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான எனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். என்னை ஆண்கள் தொடக்கூடாது. பெண்கள் மட்டுமே தொட வேண்டும்.
நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். என்னை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இந்தியாவில் கொசுக்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதனை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்ப ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இப்படி கற்பனைக்கே எட்டாத பல விஷயங்களை மனுக்களாக சிலர் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஆட்சியரிடம் அளிப்பதாகக் கூறுகின்றனர்.