162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (டிச.9) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளைக் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை - ஜெ.ஜெ.நகர் கிழக்கு, புலியூர், மந்தவெளிப்பாக்கம் மற்றும் மதுரை – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 33 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
மொத்தம் 162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் திறந்து வைத்தார்’’ என்று தெரிவிக்கபட்டுள்ளது.