தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர அண்ணாமலையில் மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது: 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் நாளை (10-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, மகா தீபம் நாளை (10-ம் தேதி) ஏற்றப்படவுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பஞ்ச பூதமும் நானே, நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், மூலவர் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

பின்னர், பிரம்மதீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இதைத் தொடர்ந்து, தீப தரிசன மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் நாளை மாலை எழுந்தருளுகின்றனர். அப்போது, ஆண் பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளுகிறார். பின்னர், தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்ற, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

அண்ணாமலையாரே ஜோதி வடிவமாக காட்சி கொடுப்பதால், மகா தீபம் ஏற்றியதும், மூலவர் சன்னதி மூடப்படும் (மறுநாள் வழக்கம்போல் நடை திறக்கப்படும்). மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற 200 கிலோ மற்றும் 5 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரைக்கு நேற்று பூஜை செய்யப்பட்டு, கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.

கார்த்திகை தீப விழா (10-ம் தேதி) மற்றும் பவுர்ணமிக்கு(11-ம் தேதி) சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,615 சிறப்பு பேருந்துகள், வேலூர், விழுப்புரம், கடலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 10 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபட உள்ளனர்.

SCROLL FOR NEXT