கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நேற்று கால்வாய்க்குள் கார் கவிழ்ந்ததில் கணவன், மனைவி, ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குலசேகரத்தை அடுத்த அஞ்சு கண்டரையைச் சேர்ந்தவர் அனிஷ் (30). விடுமுறை நாள் என்பதால் நேற்று இவர், தனது மனைவி மஞ்சு (27), ஒன்றரை வயது குழந்தை அமர் நாத் ஆகியோருடன் குலசேகரத் துக்கு காரில் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அஞ்சுகண்டரையில் காய குண்டு எனும் இடத்தில் கோதை யாறு இடதுகரை கால்வாய் கரை யோரம் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. கால் வாயில் தண்ணீர் அதிகமாக செல்வ தால் காருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கார் தண்ணீரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. கதவை திறக்க வழியின்றி அனிஷ், மஞ்சு, குழந்தை அமர்நாத் ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
நீண்ட நேரம் கழிந்த பிறகே அவ் வழியாகச் சென்ற மக்கள் கால் வாயில் கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்தனர். கண்ணாடியை உடைத்து 3 பேரையும் மீட்டனர். குலசேகரம் போலீஸார் அங்கு வந்து 3 பேரையும் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.