பெண்களின் பாதுகாப்புக்கான ‘காவலன்’ செயலியை தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்ததாக, பிற மாநிலம் செல்லும் பெண்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக் காக ‘112-ஷவுட்’ என்ற பெயரில் புதிய செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் கால்நடை பெண் மருத் துவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய வர்களை அம்மாநில போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசரகால தேவைக்கு பயன்படும் ‘காவலன்’ செயலியை தங்களது செல் போனில் பதிவிறக்கம் செய்து அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த செயலி குறித்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சென்னையிலும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வரு கிறது.
‘காவலன்’ செல்போன் செயலி குறித்து வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் கூறும்போது, “பெண்களின் பாதுகாப்புக்கான ‘காவலன்’ செயலியை அனைத்து பெண்களும் தங்களின் செல்போனில் பதிவிறக் கம் செய்து கொள்வது அவசியம்.
அவசரகால உதவிக்கு செயலி யில் உள்ள எஸ்ஓஎஸ் பட்டனை ஒருமுறை அழுத்தினால் போதும். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் சென்று விடும். அழைப்பவர்கள் போலீஸாரின் தொடர் கண்காணிப்பில் வந்து விடுவார்கள். அலை (டவர்) தொடர்பு இல்லாத இடங்களில் எச்சரிக்கை செய்தியை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து உங்களின் செல்போனை உங்கள் பாதுகாப்பு ஆயுதமாக மாற்றுங்கள்" என்றார்.
6 லட்சம் பேர் பதிவிறக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி கூறும்போது, “காவலன் செயலியை இதுவரை தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் செல் போனில் பதிவிறக்கம் செய்துள்ள னர். அவசர காலத்தில் அழைப்பு விடுத்த 2 முதல் 6 நிமிடங்களுக்குள் போலீஸார் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியில் ஈடுபடுபவார்கள்" என்றார்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதிலுமிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 27 லட்சம் அழைப்புகள் சென்றுள்ளன. இதில், 4.25 லட்சம் அழைப்புகள் துயர் களைய வேண்டும் அழைப்புகளாகும். ‘காவலன்’ செயலியும் தற்போது காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
112-ஷவுட் செல்போன் செயலி
அடுத்ததாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்காக ‘112-ஷவுட் செல்போன் செயலி’ விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலம் செல்லும் தமிழக பெண்கள், பயணிகள் பிற மாநிலங்களில் ஆபத்துக்கு உள்ளானால் சம்பந்தப்பட்ட மாநில போலீஸாருடன் இணைந்து துயர் மீட்பு பணியில் உடனடியாக ஈடுபட உதவும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படும்’’ என்றனர்.